வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு - TPV2
இது ஒரு மீள்பதிவு, சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் எழுதிய இடுகை.
***************************************************************
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று வைகுண்ட ஏகாதசி (17/12/2010) நாளன்று, பிருந்தாவனஷேத்ர நாயகனான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம் அவனருளால் கிடைக்கப் பெற்றது மன நிறைவை அளித்தது.
திருப்பாவையின் இரண்டாவது பாசுரமானது, நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது।வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!
பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக !
பாற்கடலில் (பாம்பணையில்) யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!
பாசுரச் சிறப்பு:
திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள், முறையே, பரமபதம் (நாராயணன் என்ற வியூகம்), திருப்பாற்கடல் (பையத்துயின்ற பரமன்), அவதாரம் (ஓங்கி உலகளந்த உத்தமன்!), அந்தர்யாமி (ஆழிமழைக்கண்ணா, பத்மனாபன்), கோயில் வழிபாட்டுக்கான அர்ச்சை (மாயன், தாமோதரன்) என்ற 5 இறை நிலைகளைப் பற்றிப் பேசுகின்றன.
ஆண்டாள், பூவுலக அடியார்களை "வையத்து வாழ்வீர்காள்!" என்று விளித்து, எது மோட்ச சித்தியாகிய பேரின்பத்தை நல்க வல்லது என்பதை மிக நேரடியாக, எளிமையாக சொல்லி விடுகிறாள்! அதாவது, "பையத்துயின்ற பரமனடி" பாடுவது (சரணாகதி) மட்டுமே உபாயம். இவ்வுலகத்தில் பிறந்து வாழ்வதற்கான
முக்கிய நோக்கமே அது தான்! மற்றவை எல்லாம் secondary...
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்" என்பதிலும் ஒரு சுவையான சங்கதியை ஆண்டாள் தெரிவிக்கிறாள்! தென்னாட்டினர், நோன்பின்போது அரிசியை கைவிடுகிறார்கள், வடநாட்டினர் கோதுமையை தவிர்க்கிறார்கள் இல்லையா? அது போல, ஆய்ச்சிமார்கள் (பசுவிலிருந்து கிடைக்கும்) தாங்கள் மிக விரும்பி
உண்ணும் நெய்யையும், பாலையும் பாவை நோன்பின்போது கை விடுவதை இதில் உணர்த்துவதாக கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே! ஆய்க்குல பெண்டிர், கண்ணனுக்கு வேண்டி, மையிடுவதையும், மலர் சூடுவதையும் கூட தள்ளி வைக்கிறார்கள்.
இறுதியாக, "நாராயணனே நமக்கு பறை தருவான்" என்பதில் மிகப் பெரிய அர்த்தமிருக்கிறது! நோன்பிருந்து சிலபல சிற்றின்ப விஷயங்களை துறந்தாலும், ஒரு கர்ம யோகியைப் போல, கண்ணன் மனது வைத்தால் மட்டுமே (பிராப்தம்!) சித்தி கை கூடும் என்பதைப் புரிந்தவராக கோபியர் இருப்பதை உணர முடிகிறது!பாசுர உள்ளுரை:
1. வைணவ அடியார்க்கு, பரமன் மேல் உள்ள பக்தியை விடவும், ஞானத்தை விடவும், உள்ளத் தூய்மையும், ஈகையும், எளிமையும் முக்கியமானவை என்பதை இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துகிறது.
2. முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள் மதி நிறைந்த), பரமன் அடியவர்க்கு என்னென்ன செய்வான் என்பதை குறிப்பிட்ட ஆண்டாள் நாச்சியார், இப்பாசுரத்தில், அடியவர் செய்யத் தக்க / கூடாத செயல்களைப் பற்றிக் கூறுகிறார்!
3. மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு - "பரமனடி பாடி" என்பது வாசிகம்
ஆ) செயல் - நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் - "உய்யுமாறெண்ணி" அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்
4. "ஐயம்' என்பது ஆச்சார்ய சமர்ப்பணத்தையும், "பிச்சை" என்பது சன்னியாசிகளுக்கு உரிய சமர்ப்பணத்தையும் குறிக்கிறது.
5. நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு: நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.
கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை
6. மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும், ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.
7. 'உய்யுமாறெண்ணி' என்ற பதத்தை 'உய்யும்', 'ஆறு எண்ணி' என்று பிரிக்கலாம். 'உய்யும்' என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது. அதை அடைய, வரதராஜப் பெருமான், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, "ஆறு எண்ணி" என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.
அந்த ஆறு கோட்பாடுகள்:
1. ஸ்ரீமன் நாராயணனே ஆதிமூலம், அனைத்துக்கும் காரண கர்த்தா
2. எல்லா உயிர்களிலும் ஜடப் பொருள்களிலும் ஸ்தூல / சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்
3. பரமனின் திருவடிகளில் சரணாகதி அடைவதே மோட்ச சித்திக்கான ஒரே உபாயம்
4. அந்திம காலத்தில், பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை
5. உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
6. கற்றறிந்த வைணவ ஆச்சார்யனின் உபதேசமே சுயத்தை உணரும் (self enlightenment) நிலையை அடைவதற்கான உபாயம்
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
test !
பாலா
உய்யும் ஆறுக்கு திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம் கேட்டுச் சொன்னதைத் தொடர்புறுத்தியது நல்லா இருக்கு!
பொதுவா விரதம்-னா சாப்பிடாம இருந்தாப் போதும்-னு தான் பல பேர் நினைச்சிக்கிறாங்க! ஆனா மத்த வன் செயல்கள் எல்லாம் கரெக்டா அந்தந்த நேரத்துக்குப் பண்ணிடுவோம்!
அதான் வெறுமனே நெய் உண்ணோம், பால் உண்ணோம்-னு சொல்லாம
பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-னு சொல்கிறாள் ஆண்டாள்!
இங்கே பரமன் அடி பாடுதல் தான் முக்கியம். உண்ணாது இருத்தல் அடுத்த நிலை தான்! அதை நோன்பு துவக்கத்திலேயே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லிடறா பாருங்க! :-)
கண்ணபிரான்,
//பொதுவா விரதம்-னா சாப்பிடாம இருந்தாப் போதும்-னு தான் பல பேர் நினைச்சிக்கிறாங்க! ஆனா மத்த வன் செயல்கள் எல்லாம் கரெக்டா அந்தந்த நேரத்துக்குப் பண்ணிடுவோம்!
அதான் வெறுமனே நெய் உண்ணோம், பால் உண்ணோம்-னு சொல்லாம
பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-னு சொல்கிறாள் ஆண்டாள்!
இங்கே பரமன் அடி பாடுதல் தான் முக்கியம். உண்ணாது இருத்தல் அடுத்த நிலை தான்! அதை நோன்பு துவக்கத்திலேயே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லிடறா பாருங்க! :-)
//
சுவையான தெளிவான புரிதல் !
அது போலவே, வெளிப்பூச்சை விட (மை, மலர்) மனத்தூய்மையே பரமனடி பாடுவதற்கான முக்கிய குவாலிபிகேஷன் என்பதையும் ஆண்டாள் நமக்குச் சொல்லி விடுகிறார் அல்லவா ?
நன்றி.
எ.அ.பாலா
பாலா,
ஐயம் என்பது பிரம்மசாரிகளுக்குக் கொடுக்கப் படுவதையும் பிச்சை என்பது சன்யாசிகளுக்குக் கொடுக்கப் படும் பிட்சையையும் குறிக்கும் என்று படித்ததாக நினைவு.
உய்யும் வழி எண்ணி என்று உய்யுமாறு என்பதற்குப் பொருள் புரிந்து வைத்திருந்தேன். திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜரிடமிருந்து உடையவர் கேட்டறிந்த ஆறு பதிலகளை எண்ணி என்னும் விளக்கம் அருமை.
Test !
Test comment!
நீங்கள் சொன்னது போல தொடர்ந்து 30 நாட்களும் வந்து, படித்து, இன்புறப் போகிறேன் :-)
நன்றி :-)
amas32
Post a Comment